Saturday, 2 January 2021

கொங்கணப்பள்ளி குத்துக்கல் -2500 Years Old MENHIR -கிருஷ்ணகிரி மாவட்டம்- KHRDT&MUSEUM...





 

கீழ்சீனிவாசபுரம் - தொறுபூசல் பாறைஓவியத்தொகுதி











 

பாறை ஓவியத்தில் தொருபூசல்-

ஜகதேவியை அடுத்த கீழ் சீனிவாரபுரத்தை சேர்ந்த பொன்னுசாமி மற்றும் இளைஞர்கள் ஒரு பாறை ஓவியத்தை கண்டறிந்துள்ளதாகவும் அதை ஆய்வு செய்யும் படி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கீழ் சீனிவாசபுரம் சென்றது . அந்த பாறை ஓவியங்களை ஆய்வு செய்த காப்பாச்சியர் கோவிந்த ராஜ் கூறியதாவது

ஊரிலிருந்து காட்டுப்பகுதி வழியாக செல்லும் பாதையை ஒட்டி அமைந்துள்ள பன்னிகுண்டு என்ற பாறையின் குகைப்போன்ற அமைப்பில் இடப்புறம், வலப்புறம் என இரண்டு ஓவியத் தொகுதிகள் காணப்படுகின்றன.

தொறுபூசல்:

இடதுபுறத்தில் உள்ள ஓவியத் தொகுதியில் வரிசையாக சிறிய அளவில்  7 மனித உருவங்கள் கையில் ஆயுதம் ஏந்தி போரிடுவதுபோல் வரையப்பட்டுள்ளது. இதில் 4 ஓவியங்கள் தெளிவாகவும் 3 ஓவியங்கள் சிதைந்தும் உள்ளன. இவர்கள் அனைவரும் வரிசையாக வரையப்பட்டுள்ளனர். வலது கோடியில் சற்று உயரத்தில் வரையப்பட்டுள்ள மனித உருவம் ஒரு விலங்கினை ஒரு கையில் பிடித்தவாறும் மறு கையில் வாளை ஏந்தியும் உள்ளது. இவ்விலங்கின் கொம்பு மற்றும் உடல், வால் அமைப்புக்களைக் கொண்டு மாடு எனக் கொள்ளலாம். மாட்டின் முகம் வரிசையான மனிதர்களை நோக்கி உள்ளது.

இவ்வோவியத் தொகுதியானது சங்க இலக்கியங்கள் கூறும் ஆநிறை கவர்தல் மற்றும் ஆநிறை மீட்டல் ஆகியவற்றுக்காக நடக்கும் பூசலை சித்தரிப்பதாக உள்ளது. ஆநிறை கவர்தல் மற்றும் மீட்டலில் நடக்கும் பூசலில் இறப்போருக்கு நடுகல் எடுக்கும் வழக்கம் இம்மாவட்டத்தில் பரவலாக இருந்துள்ளதை பல நடுகற்கள் நமக்கு எடுத்துக் கூறுகின்றன. முல்லை நிலப் பகுதியாகையால் இத்தகைய பூசல்கள் இங்கு காலம் காலமாக நடந்துவந்ததில் வியப்பில்லை. இதற்கான ஆதரங்களாக ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்கள் மற்றும் வரலாற்றுக்கால நடுகற்களே இருந்துவந்துள்ள நிலையில் சங்க இலக்கியங்களுக்கு சம காலத்தில் வரையப்பட்டுள்ள தற்போது ஆய்வு செய்யப்பட்டுள்ள இப்பாறை ஓவியமானது தொறுபூசலுக்கான மிகத் தொன்மையான சான்றாக அமைந்துள்ளது எனலாம். தொறு பூசலில் இறந்த வீரனின் நினைவாக இது வரையப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல இடங்களில் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் ஒரு செய்தியை தாங்கியுள்ளன. அவ்வகையில் இவ்வோவியத் தொகுதியானது சங்ககால தொறுபூசல் என்னும் மிகவும் போற்றப்பட்ட  வாழ்வியல் பகுதியை படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது இம்மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்துக்கே பெருமை தரும் செய்தியாகும்.

பெருங்கற்படைக்கால ஈமச்சின்னங்கள்:

வலப்புற ஓவியங்கள் மிகவும் மங்கலாகவே தெரிகின்றன. இதன் மையப்பகுதியில் ஒரு சதுர வடிவமும் வலப்புறம் வட்ட வடிவில் சிறு புள்ளிகளும் காணப்படுகின்றன. இவற்றைச்சுற்றி சில மனித உருவங்கள் உள்ளன. இவையனைத்தும் பெருங்கற்படைக்கால கல்திட்டை மற்றும் கல்வட்டத்தை குறிப்பதாகவும்  சுற்றியுள்ள மனிதர்கள் ஈமச்சடங்கு செய்யும் இறந்தோரின் உறவினர்களையும் குறிக்கலாம்.

ஆய்வுப்பணியில் காப்பாச்சியர் ,தலைவர் நாராயணமூர்த்தி , விஜயகுமார் ,ஒருங்கிணைப்பாளர் தமிழசெல்வன் மற்றும் ஊர் இளைஞர்கள் கலந்து கொண்டனர். வரலாற்றில் இளைஞர்கள்க்கு ஆர்வம் பெருகியுள்ளதை இது காட்டுகிறது

https://youtu.be/BmSyayUTBA0

https://youtu.be/Xyopy7LGTBQ